பொது மக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடக்கூடாது. குழந்தைகள் மற்றும் எவரையும் தொடவோ அருகில் செல்லவோ அனுமதிக்கக் கூடாது. உடனே மின் வாரிய அலுவலகத்திற்கோ அந்த பகுதியின் மின் ஊழியருக்கோ தகவல் தர வேண்டும்.
மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளை அந்த இடங்களில் விளையாட விடக்கூடாது.
குழந்தைகள் மின்கம்பங்கள் அருகில் விளையாட விடக்கூடாது. மின்மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின்கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது.
வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும், மேலும், வீட்டினில் எர்த்தினை முறையாக பராமரிக்கவேண்டும். ஈரக்கைகளால் ஸ்விட்ச் மற்றும் மின் சாதனங்களை இயக்க கூடாது. வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். மெயின் சுவிட்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது நீக்கம் செய்யக் கூடாது.
சுவிட்சை நிறுத்திய பிறகே மின் விசிறி, அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை இணைக்கவோ, துண்டிக்கவோ வேண்டும். செல்போன்கள் சார்ஜில் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். நுகர்வோர் தன்னிச்சையாக மின் மாற்றிகளில் (பியூஸ்) மாற்றக்கூடாது.
இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது நல்லது